செவ்வாய், 1 ஜூலை, 2008

ஒருநதி‍-ஒருமரம்-இருமரணங்கள்

ஆற்றங்கரையின் விளிம்பில்
வீற்றிருக்கும்
தென்னை மரத்திலிருந்து
விழுந்து இறந்தவர்களின்
எண்ணிக்கை
இத்தோடு இரண்டு ஆயிற்று.

முன்பு
தாத்தா காலத்தில்
ஒருவர்
கால் இடறி,
நீரில் விழுந்து மூழ்கி...

இப்போது
மற்றொருவர்
அவ்வாறே கால் இடறி,
ஆனால்
மண்டை உடைந்து,இரத்தம் சிந்தி...

ஆற்றங்கரையின் விளிம்பில்
வீற்றிருக்கும்
தென்னை மரத்திலிருந்து
விழுந்து இறந்தவர்களின்
எண்ணிக்கை
இத்தோடு இரண்டு ஆயிற்று.

செவ்வாய், 17 ஜூன், 2008

விலைவாசி

விறகு அடுப்பில் சமைத்த பொழுது

"கண் எரிகிறது"

என்று சொன்ன அம்மா

சமையல் எரிவாயு

பயன்படுத்த ஆரம்பித்த பிறகு

புலம்பிக் கொண்டிருக்கிறாள்

வயிறு எரிகிறதென.

வெள்ளி, 13 ஜூன், 2008

குழந்தை தொழிலாளி

எனக்குமுன் சாப்பிட்டவர்
மூடாமலேயே விட்டுசென்ற எச்சில்இலை
அசிங்கமாய் தெரியவில்லை.
எட்டுவயது சிறுவன்
அதை எடுத்து எறியும்
வரையில்.

யார் ம‌னித‌ன்?

ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்தேன்

எல்லோரும் சொன்னார்கள்

"நான் இரண்டுகால் புள்ளிமான்" என்று

கணிதத்தில் நூற்றுக்குநூறு வாங்கினேன்

எல்லோரும் சொன்னார்கள்

"நான் கணக்கில் புலி" என்று.

அலுவலகத்தில் கடுமையாய் உழைத்தேன்

எல்லோரும் சொன்னார்கள்

"நான் மாடாய் உழைக்கிறேன்" என்று.

அடிப்ப‌ட்டு கிட‌ந்த‌ ஒரும‌னித‌னை

அவ‌ச‌ர‌,அவச‌ர‌மாய்

ம‌ருத்துவ‌ம‌னையில் கொண்டு சேர்த்தேன்

எல்லோரும் சொன்னார்க‌ள்

"உண்மையிலேயே இவ‌ன்தான் ம‌னித‌ன்" என்று.

ஜல்லிக்கட்டு

அந்திப்பொழுதில்கன்றீந்த‌
தன்
வெள்ளைப் பசுவிற்காய்
இரவெல்லாம் தூங்காமல்
கண்விழித்திருந்த‌
மேலத்தெரு
சாமிராசும்

தனக்கு தெரியாமல்
மயிலக் காளையை
விற்றதற்காக‌
மூன்றுநாள்
சாப்பிடாமல் அடம்பிடித்த‌
பக்கத்துவீட்டு சுந்தரமும்

மாட்டுக்கு
புல்லறுக்கையில்
தன் விரலை
அறுத்துக் கொண்ட‌
கெடாமீசை முருகேசனும்

இப்பொழுது
சிறைச்சாலையில்

ஜல்லிக்கட்டு நடத்தி
பசுவதை செய்த‌குற்றத்திற்காக..

வெள்ளி, 23 மே, 2008

இளைஞர்க‌ள் - 2007

மலிவுவிலை மதுக்கடைகளில்
தள்ளாடும் நாங்கள்
நாளைய இந்தியாவை
தாங்கபோகும்தூண்கள்.

பங்க் கடைகளில்
கணக்கு வைத்து
புகைந்து கொண்டிருக்கும் நாங்கள்
எதிர்கால இந்தியாவின்எழுச்சி தீபங்கள்.

வெள்ளித் திரையின் இருளில்
சிறை இருக்கும் நாங்க‌ள்
நாளை உத‌ய‌மாக‌ போகும்
இந்தியாவின் விடிவெள்ளிக‌ள்.

டிஸ்கொதே கிள‌ப்புக‌ளில்
அரைநிர்வாண‌ பெண்க‌ளுட‌ன்
ஆடிகொண்டிருக்கும் நாங்க‌ள்
நாளைய‌ இந்தியாவை ஆள‌ப்போகும் அர‌ச‌ர்க‌ள்.

அமெரிக்க‌ க‌ன‌வுக‌ளுட‌ன்
உற‌ங்கிக் கொண்டிருக்கும் நாங்க‌ள்
நிக‌ழ்கால‌ த‌லைவ‌ர்க‌ளின்
க‌ன‌வுக‌ளில் வ‌ரும்க‌தாநாய‌க‌ர்க‌ள்.

கவிதை சாகுபடி

உன் கண்களென்னும்
கலப்பை கொண்டு
என் இதயமென்னும்
ஈரநிலத்தை
கிழித்தெரிந் திருக்காவிட்டால்
என்னுள்
எப்படி விளைந்திருக்கும்?
கவிதை என்னும்
குறுவை சாகுபடி.

உழவன் மகன்

தாத்தா

யானை கொண்டு

போரடித்த இடத்தில்

அப்பா

காளை கொண்டு

போரடித்த இடத்தில்

மகன்

தன் நண்பர்களுடன்

பேசிக்கொண்டிருக்கிறான்

போரடிக்கிறதென...

உழவன் மகன்-2

பன்னிரெண்டாம் வகுப்பில்

இர‌ண்டாவ‌து முறையாக‌தவறியவுடன்

"என்னுடன் திருப்பூருக்கு வந்துவிடு"

என்றார் பெரியப்பா"

நிலத்தை விற்றுவெளிநாட்டுக்கு அனுப்பலாம்"

என்றார் மாமா"

பக்கத்து நகரில்பெட்டிக்கடை வைத்துக்கொள்"

என்றார் அப்பா

கடைசிவரையாருமே சொல்லவில்லை

விவசாயம் பார் என்று.

சுதேச பற்று

அந்நியன்

அவசியமில்லாமல் வரி கேட்டபோது

ஆர்த்தெழுந்த இந்தியர்கள்

இப்போது

அரசு அதிகாரிக‌ள்

லஞ்சம் கேட்கும்போது

அமைதியாகவே இருக்கிறார்கள்.

ஓ!கேட்பது இந்தியன்என்பதால் சுதேசபற்றா?