செவ்வாய், 17 ஜூன், 2008

விலைவாசி

விறகு அடுப்பில் சமைத்த பொழுது

"கண் எரிகிறது"

என்று சொன்ன அம்மா

சமையல் எரிவாயு

பயன்படுத்த ஆரம்பித்த பிறகு

புலம்பிக் கொண்டிருக்கிறாள்

வயிறு எரிகிறதென.

வெள்ளி, 13 ஜூன், 2008

குழந்தை தொழிலாளி

எனக்குமுன் சாப்பிட்டவர்
மூடாமலேயே விட்டுசென்ற எச்சில்இலை
அசிங்கமாய் தெரியவில்லை.
எட்டுவயது சிறுவன்
அதை எடுத்து எறியும்
வரையில்.

யார் ம‌னித‌ன்?

ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்தேன்

எல்லோரும் சொன்னார்கள்

"நான் இரண்டுகால் புள்ளிமான்" என்று

கணிதத்தில் நூற்றுக்குநூறு வாங்கினேன்

எல்லோரும் சொன்னார்கள்

"நான் கணக்கில் புலி" என்று.

அலுவலகத்தில் கடுமையாய் உழைத்தேன்

எல்லோரும் சொன்னார்கள்

"நான் மாடாய் உழைக்கிறேன்" என்று.

அடிப்ப‌ட்டு கிட‌ந்த‌ ஒரும‌னித‌னை

அவ‌ச‌ர‌,அவச‌ர‌மாய்

ம‌ருத்துவ‌ம‌னையில் கொண்டு சேர்த்தேன்

எல்லோரும் சொன்னார்க‌ள்

"உண்மையிலேயே இவ‌ன்தான் ம‌னித‌ன்" என்று.

ஜல்லிக்கட்டு

அந்திப்பொழுதில்கன்றீந்த‌
தன்
வெள்ளைப் பசுவிற்காய்
இரவெல்லாம் தூங்காமல்
கண்விழித்திருந்த‌
மேலத்தெரு
சாமிராசும்

தனக்கு தெரியாமல்
மயிலக் காளையை
விற்றதற்காக‌
மூன்றுநாள்
சாப்பிடாமல் அடம்பிடித்த‌
பக்கத்துவீட்டு சுந்தரமும்

மாட்டுக்கு
புல்லறுக்கையில்
தன் விரலை
அறுத்துக் கொண்ட‌
கெடாமீசை முருகேசனும்

இப்பொழுது
சிறைச்சாலையில்

ஜல்லிக்கட்டு நடத்தி
பசுவதை செய்த‌குற்றத்திற்காக..