சனி, 26 டிசம்பர், 2009

அறிவே அழகு

பக்கத்துவீட்டு அக்காவை
ரொம்பவும் பிடிக்குமெனக்கு . .
எதற்கெனத் தெரியவில்லை
எங்கள் கிராமத்தில்
முதன்முதல் பொறியியல் படித்தவள் என்பதாளா?

இல்லை,
என் அப்பாவும்,தாத்தாவும் கூட பயப்படும்
கோவில் குறிசொல்பவர் குறித்து
"பித்த‌லாட்ட‌க்காரன்" என்று ஏளன‌ம் செய்யும் ப‌குத்தறிவு கண்டா?

இல்லை,
பாடப்புத்தகத்தில் மட்டும் இருக்கும்
புதுமைப்பெண்ணுக்கு
வாழும் உதாரணமாய் இருப்பதாளா?
ஏனோ சிறுவயதிலிருந்து பிடிக்குமெனக்கு . .

ஆனால்
இப்பொழுதெல்லாம் அவளை சரிவர‌ப் பிடிப்பதில்லை . .

ஒருமுறை
தன் மாநிற முகத்தை
சில வாரங்களில் சிவப்பழகாக்கும்
அழகு க்ரீம்களை கொண்டு
சிவப்பாக்க முயற்சித்த
பேதமையைக் கண்டு . .

புதன், 23 டிசம்பர், 2009

கறுப்பு

எங்க ஊர் கோயிலுக்குள்
கறுப்பு நிறத்துக்கு மட்டும் அனுமதி இல்லை
சட்டைத்துணி,கைக்கடிகாரம்
ஏன் கறுப்பு நிற‌ பெல்டைக்கூட‌
வெளியிலதான் வைத்துவிட்டுப் போகவேண்டும்

"ஆத்தாவுக்கு கறுப்பு நெறம் ஆகாதாம்,
மீறி உள்ளபோனா தண்டிச்சிடுவாளாம்"
கதை,கதையாய் சொல்லுவார்
கோவில் பூசாரி

ஆனால்
தண்டிக்கும் ஆத்தாவும்,கதை சொல்லும் பூசாரியிம்
ஒருமுறைக் கூட தடுத்ததில்லை

ஒவ்வொரு ஆண்டும்
தன் கருப்புபணத்தை செலவு செய்து
திருவிழா எடுக்கும்
மேலத்தெரு மிராசுதாரை

புதன், 16 டிசம்பர், 2009

ஆணாதிக்க வேர்

ச்சே.. என்னதான் சொல்லு
"பெங்களூரு மாதிரு இல்லடா நம்ம ஊரு"

அங்கல்லாம் பாரு
எல்லா பொண்ணுங்களும்
ஜீன்சு போட்டுகிட்டு திரியிராளுக..

இங்கயும்தான் இருக்குறாளுகளே

எவளாவது ஒருத்தி...

ம்ஹூம்..

"எல்லாம் பவாட தாவனியிம்,சுடிதாரும்தான்"..

அங்கலாயித்துக் கொண்டான்
"முந்தாநாள் கடைத்தெருவில்
தனக்கு ஜீன்சும்
தன் தங்கை ஆசையிடன் மிடி கேட்டாலும்
சுடிதார் மட்டும்
வாங்கி கொடுத்த
நண்பன் முருகேசு"